பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்....
நபி (ஸல்) அவர்களின் 35வது வயதில் குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர். கஅபா, ஓர் ஆள் உயரத்திற்குப் பாறைகளால் கட்டப்பட்டிருந்தது. அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே மேல்முகடு இன்றி ஒன்பது முழம் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. இந்நிலையில் கஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. அதன்மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாக குறைஷியர்கள் அதைப் புதுப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். அதனை ஹலாலான (தூய்மையான) வருமானத்தைக் கொண்டே செப்பனிட வேண்டும்; வட்டி, விபசாரம், திருட்டு போன்ற பொருட்களின் மூலமாக செப்பனிடக் கூடாது என அனைவரும் கூடி முடிவெடுத்தனர். இந்நிலையில் பழைய கட்டடத்தை எவ்வாறு இடிப்பது என அனைவரும் அஞ்சினர். வலீத் இப்னு முகீரா மக்ஜூமி கடப்பாரையை எடுத்து “அல்லாஹ்வே! நான் நன்மையை நாடியே இதைச் செய்கிறேன்” என்று கூறி ருக்னுல் யமானி, ருக்னுல் ஷாமியின் பகுதிகளை இடித்தார். அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாததைக் கண்ட குறைஷியர்கள் அச்சம் தெளிந்து, அவருடன் இணைந்து இடித்தனர். இறுதியாக, இப்றாஹீம் (அலை) அவர்கள் அமைத்த அஸ்திவாரம் தென்பட்டது. பிறகு கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ‘பாகூம்’ என்ற ரோமானிய பொறியியல் வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர். இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்” இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம், “இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் “இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது. குறைஷியரிடம் ஹலாலான (தூய்மையான) செல்வம் குறைவாக இருந்ததால் வடபுறத்தில் ஆறு முழங்கள் அளவு விட்டுவிட்டு கஅபாவை கட்டி விட்டார்கள். அந்த இடத்துக்கு ‘ஹதீம்’ என்றும் ‘ஹஜர்’ என்றும் கூறப்படுகிறது. தாங்கள் விரும்பாத எவரும் கஅபாவினுள் நுழையக் கூடாது என்பதற்காக கஅபாவின் வாயிலை உயரத்தில் அமைத்தார்கள். கஅபாவை 15 முழம் வரை உயர்த்தியவுடன் மூன்று தூண்களை நிறுவி அதற்கு முகடு அமைத்தார்கள். இவ்வமைப்பின்படி கஅபா ஏறக்குறைய சதுரமாக அமையப் பெற்றது. அதன் உயரம் 15 மீட்டர் ஆகும். ஹஜ்ருல் அஸ்வத் உள்ள பகுதி மற்றும் அதன் எதிர்ப்புற பகுதியின் அகலம் 10 மீட்டர் ஆகும். தவாஃப் செய்யும் இடத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் 1.5 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கஅபாவின் வாசலுள்ள பகுதியும் அதன் பின்பகுதியும் 12 மீட்டர் அகலமாகும். கஅபாவின் வாசல் தரையிலிருந்து 2 மீட்டர் உயரத்திலிருக்கிறது. கஅபாவின் அஸ்திவாரத்தைச் சுற்றி சிறிய முட்டுச்சுவர் கட்டப்பட்டது. அதன் உயரம் 25. செ.மீ. (கால் மீட்டர்) அதன் அகலம் 30 செ.மீ. இதற்கு ‘ஷாதர்வான்’ என்று சொல்லப்படும். இதுவும் கஅபாவைச் சேர்ந்த பகுதிதான். எனினும், குறைஷியர்கள் அதைத் தவிர்த்து உள்ளடக்கிக் கட்டி விட்டனர். (தபரீ, இப்னு ஹிஷாம்)
No comments:
Post a Comment